கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால் தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.