![Let's defeat OPS in upcoming election](http://image.nakkheeran.in/cdn/farfuture/-_4AdNCyj8KfgyOK0Y-wcvwiPhUaQJ0KElvioBk2Fyw/1615198853/sites/default/files/inline-images/th-1_760.jpg)
போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்.சை தோற்கடிக்க வேண்டும் என சீர்மரபினர் சங்க நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கிவந்த 20 சதவீத இடஒதுக்கீட்டில், அரசியல் காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனால் இதுவரை 20 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வந்த சீர்மரபினர் சமூகத்தினர் பெருமளவு பாதிக்கப்படுவர் என இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தென் மாவட்டங்களில் சீர்மரபினர் சங்கத்தினர் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். போடியில் ஓ.பி.எஸ். போட்டியிடுவார் என தகவல் வெளியானதும் சீர்மரபினர் நல சங்க மாவட்ட நிர்வாகி ராம மூர்த்தி ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், “உறவுகளே வருகிற சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் துணை முதல்வர் மீண்டும் நிற்க தயாராகிவிட்டார். அவரை தோற்கடிக்க என்ன வேலையோ அதை விரைவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சீர்மரபினர் வீடு வீடாகச் சென்று மண்டியிட்டு, வாக்காளர்களின் காலில் விழுந்து ஓ.பி.எஸ்.சை தோற்கடியுங்கள்.
உங்களது பிள்ளை குட்டி அனைவரும் நடுத்தெருவில்தான் நிற்கும். நீங்கள் களை எடுத்தால் உங்கள் பிள்ளையும் அதைத்தான் எடுக்கும். நீங்கள் மாடு மேய்த்தல் உங்கள் பிள்ளைகளும் மாடுதான் மேய்க்கும். இதனை அனைவருக்கும் புரியவைத்து, தெரியவைத்து ஓபிஎஸ் தோற்கடிக்கச் செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போடி தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே, கடந்த தேர்தலில் ஓபிஎஸ்க்கு பெரும் ஆதரவாக இருந்த சமூகத்தினர், தற்போது எதிர்ப்பு குரல் கொடுத்து வருவது அதிமுக மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.