Skip to main content

புத்தகப் பைகளில் தலைவர்கள் படங்கள் கூடாது - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

hg

 

பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாது; இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், பைகளில் உள்ள புகைப்படங்களை நீக்க விரும்பவில்லை. இதுதொடர்பாக பேரவையில் பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், புகைப்படங்களை மாற்ற 13 கோடி செலவாகும் என்று தாம் கூறியதாகவும், அப்படியென்றால் அவர்கள் படமே இருந்துவிட்டு போகட்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாகவும் தெரிவித்தார்.

 

இதுதொடர்பாக வழக்கு விசாரணையில், தலைவர்களின் படங்கள் புத்தகப் பைகளில் எதற்கு என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், "முன்னாள் முதல்வர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தகப் பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது; அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். புத்தகப் பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை. எதிர்காலத்தில் இது தவிர்க்கப்படும்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்