![Kurinjipadi](http://image.nakkheeran.in/cdn/farfuture/Fb4PU38VGQRBVC1dXaIVHYZLYDnYHb9_h01p2F6EIkg/1596727217/sites/default/files/inline-images/501_27.jpg)
கரோனா பயத்தில் பேரூராட்சி அலுவலகத்தை இழுத்து மூடிவிட்டு பேரூராட்சி செயல் அலுவலரும், ஊழியர்களும் தங்களை அலுவலத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளது பொது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் முகக் கவசங்களோ, கையுரைகளோ இல்லாமல் தன் நலம் பாராமல் தூய்மைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பணிபுரியும் செயல் அலுவலர் உட்பட்ட பேரூராட்சி ஊழியர்கள் தங்களுக்கு கரோனா தொற்று வந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக அலுவலகத்தில் இருந்து கொண்டே பொது மக்களின் அத்தியாவசிய குறைகளைக் கேட்கக்கூட அனுமதிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பேரூராட்சியில் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி மற்றும் தொழில் நடத்த உரிமம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என எந்தப் பணிகளையும் செய்து கொடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி படுவதாகக் கூறுகின்றனர்.
தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எந்த அரசு அலுவலகங்களையும் இழுத்து மூடிவிட்டு மக்கள் பணிகள் செய்ய வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த அலுவலக அதிகாரிகள் இப்படிச் செய்வதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.