கே.டி.ராஜேந்திரபாலாஜி அசராமல் பேட்டியளித்தாலும், ஏதாவது ஒரு விவகாரத்தில் சிக்கிவிடுகிறார். வேட்பாளர்களை அழைத்துச்சென்று மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தபோது எடுத்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம்பண்ணையில், தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் பெண் தொழிலாளர்களிடம் அமைச்சரும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களும் வாக்கு சேகரித்தனர்.
அந்த நேரத்தில், மாணவிகள் இருவர் சீருடையோடு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். பள்ளியிலிருந்து அப்படியே தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வந்து பகுதி நேர ஊழியர்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த மாணவிகளும் வாக்கு சேகரித்தபோது எடுத்த புகைப்படத்தில் இடம்பெற்றுவிட்டனர்.
அந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது. ‘ஸ்கூல் படிக்கிற புள்ளைங்க யூனிபார்ம்கூட மாற்றாமல் வேலைக்கு வந்திருக்காங்க. அதிமுக ஆட்சியின் அவலம் இது. அந்த மாணவிகள்கிட்டயும் போய் ஓட்டு கேட்கிறாங்களே? இவரெல்லாம் ஒரு அமைச்சர்!’ என்கிற ரீதியில் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.