
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 08/04/2025 அன்று பரபரப்பு தீர்ப்பு அளித்திருந்தது.
அதில், 'தமிழக அரசின் பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முதன்முறையாக குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த எட்டாம் தேதி கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பின் முழு விவரம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. அதில் ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம். மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும், ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவருக்கும் முதன்முறையாக காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது வரலாற்று தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.