திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்கள் குளுகுளு சீசன் காலமாகும். இதனை முன்னிட்டு கோடை விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக கோடை விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் சார்பாக கோடை விழா 59வது மலர் காட்சியுடன் தொடங்கியது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலர்க்கண்காட்சி அமைந்துள்ள இடத்தினை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சக்கரபாணி, மதிவேந்தன் ஆகியோர் திறந்துவைத்து பார்வையிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையின் சார்பாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அதன்பின் கோடைவிழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் தொடங்கியது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கொடைக்கானல் பகுதிக்கு ஆங்கிலேயர் மட்டுமே வந்து சென்ற நேரத்தில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக அதிக அளவு வெளிநாட்டினர் இங்கு வருகை புரிகின்றனர். பல முக்கியத் தலைவர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். தற்போது விடுமுறையைக் கழிக்க பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களை கவரும் விதமாக அட்வெஞ்சர் டூரிசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த சுற்றுலா விரைவில் பிரபலமாகும்.
தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப் பூண்டு மருத்துவ குணம் உள்ளது. இதற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் சார்பாக விரைவில் சுமார் 1,300 ஏக்கரில் நவீன வெள்ளைப் பூண்டு விவசாயம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பயன் பெறுவார்கள். விரைவில் சுற்றுலாத் துறை மூலம் அதிக திட்டங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னரின் அறிவிப்பு கிடைத்தவுடன் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்” என்று கூறினார்.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரையன்ட் பூங்கா பகுதிக்கு 6 லட்சத்து 23 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் சுமார் 5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. இருப்பினும் இந்த பூங்காவை மேலும் நன்கு பராமரிக்க வேண்டும். தமிழக முதல்வர் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டத்தினை முதல்வர் அறிவித்து தொடக்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்” என்று கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசும் போது, “கொடைக்கானல் பகுதிக்கு ஆண்டுக்காண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு வருவதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. மேலும் ஒரு வழித்தடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் கூடுதலான வசதிகள் செய்து தரப்படும். சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கூடுதலாக விடுதிகள் கட்டப்படும். வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொடைக்கானல் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாஸ்டர் பிளான் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
அமைச்சர் மதிவேந்தன், “தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த முதல்வர் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். சுமார் 15 இடங்களை தேர்வு செய்து அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா பகுதியில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் சாகச சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சின்ன பள்ளம் பகுதியில் 1.25 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் ஹெலிகாப்டரில் நகரை சுற்றிப் பார்ப்பதற்காக திட்டமும் பரிசீலனையில் உள்ளது. கொடைக்கானல் நகரில் இருந்து முக்கியமான பகுதிகளுக்கு ரோப்கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் ஊக்குவிக்கும் வகையில் கூடாரம் அமைத்து தங்குவதற்காக தனியாக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் இதுகுறித்து விரைவில் அறிவிப்பார்” என்று கூறினார்.