சிஐடியுவின் அங்கமாக விளங்கும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் இன்று (16.02.2023) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மன்னார்புரம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் வாயிலாக கடந்த 24.02.2018 அன்று நடைபெற்ற முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380/- வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி 10 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். கே2 அக்ரிமெண்ட்படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும். கஜா, ஒக்கி, வர்தா, தானே போன்ற புயல் காலங்களில் மீட்பு பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் கருணை தொகை வழங்கி பணி நிரந்தரம் செய்திடவும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.