கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிவேக காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றுடன் வீசிய கனமழை காரணமாக தத்தனேரி பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. காஞ்சிபுரத்தின் ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஒரகடம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பொழிந்து வருகிறது. அதே போல் புதுச்சேரியின் உப்பளம், முந்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, மூலக்குளம் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் மிதமான மழை பொழிந்து வருகிறது. வில்லியனூர், பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், மதகடிப்பட்டு, திருக்கானூர், மரக்காணம், ஆலப்பாக்கம், கந்தாடு, ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையானது பொழிந்து வருகிறது.