![Kerala medical waste at the Tamil Nadu border ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/YTAetSACV4vy3fUu1W33rsLRU9wVHOAbnm2iCicCd8c/1617865700/sites/default/files/inline-images/dfyhy.jpg)
தமிழக - கேரள எல்லையான பொள்ளாச்சி அருகே மருத்துவக் கழிவுகளைக் கொட்டவந்த கேரள லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லையான பொள்ளாச்சியில் உள்ள செம்மனாம்பதி கிராமம், இரட்டைவேடு என்ற இடத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ், பாலக்காடு மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்ட இருப்பதாக தகவல் கிடைக்க, அதிகாலையிலேயே விவசாயிகள் அங்கு கூடினர். திட்டமிட்டபடி அங்கு காலை, 4 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் குழிதோண்டி கொட்ட முயன்றனர்.
ஆனால், அங்கு கூடியிருந்த விவசாயிகள் மருத்துவக் கழிவுகளோடு நின்றிருந்த டிப்பர் லாரிகளைக் கையும் களவுமாக சிறைபிடித்து காவல்துறைக்கும், வருவாய்துறைக்கும் தகவலளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் பொக்லைன், டிப்பர் லாரிகளைக் கைப்பற்றியதோடு, தோட்டத்து உரிமையாளர் ஆண்டனி ஜோஸ் என்பவரையும், லாரி ஓட்டுநர்களையும் தேடிவருகின்றனர்.
''கேரள மருத்துவக் கழிவுகள், தடையை மீறி தமிழக எல்லைகளில் கொட்டப்படுவது என்பது அடிக்கடி நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. இதற்கும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.