
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம் செம்பட்டி, வண்ணம்பட்டி, அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், சித்தரேவு, நடுப்பட்டி, பாறைப்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் நெல் விவசாயிகள் அதிகம். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல்களை விற்பதற்கு சோழவந்தான், வாடிப்பட்டி, மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வந்தனர்.
ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சியின் போது வருவாய்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கடந்த 15 வருடங்களாக ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், சித்தையன்கோட்டை, சித்தரேவு, அய்யம்பாளையம், அய்யங்கோட்டை, மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் டி.பண்ணைப்பட்டி, குட்டத்துப்பட்டி உட்பட 9 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உத்தரவுப்படி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 14ம் தேதி ஆத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திற்ககப்பட்டு இன்று வரை 3,223 மூடைகள் மூலம் 129 டன் நெல்களை கொள்முதல் செய்துள்ளனர். மேலும் நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.24.50 வரை கொடுப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்களை அறுவடை செய்து அதை விற்பனை செய்வதற்கு வியாபாரிகளை தேடி அவர்கள் கமிஷன் அடித்தது போக குறைவான பணமே பெற்று வந்த நெல் விவசாயிகளுக்கு ஆத்தூர் நெல் கொள்முதல் நிலையம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஆத்தூர் பகுதி நெல்கொள்முதல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஆத்தூர், சித்தையன்கோட்டை, கணவாய்பட்டி, பண்ணைப்பட்டி, சித்தரேவு உட்பட 9 நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நான் கொள்முதல் அலுவலராக செயல்பட்டு வருகிறேன். அமைச்சர் ஐ.பெரியசாமியின் உத்தரவின் பேரில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள், இடைத்தரகர்களிடம் சிக்காமல் நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்து நெல்களை விற்பனை செய்யலாம் என்றதோடு இதுவரை விவசாயிகளிடமிருந்து 129 டன் நெல்களை கொள்முதல் செய்து ரூ.32 லட்சம் வரை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்துள்ளோம்” என்றார்.
ஆத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை பராமரிக்கும் ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொருளாளர் ஜோசப் ஆரோக்கியசாமி கூறுகையில், “எங்கள் பகுதி விவசாயிகள் நலன் கருதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ரூ.62 லட்சம் மதிப்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டிக் கொடுத்ததால் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய நெல்களை கொண்டு வந்து விற்று விட்டு செல்கின்றனர். திமுக ஆட்சியில் எவ்வித இடையூறுமின்றி விவசாயிகள் நெல்களை விற்று வருவதை பார்த்த மாற்றக்கட்சியினர் ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் புரோக்கர்கள் போல் நெல் விவசாயிகளிடம் பேரம் பேசி தனியாரிடம் நெல்களை விற்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

இதை கண்டுபிடித்த ஆத்தூர் பட்டாதாரர் சங்கத்தினர் விவசாயிகளிடம் பேரம் பேசி கமிஷன் பார்த்த மாற்றுக்கட்சியை சேர்ந்த புரோக்கர்களை கொள்முதல் நிலையத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர். அவர்கள் மூலம் நெல் விவசாயிகளின் போர்வையில் எங்கள் ஆத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை பற்றி அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம்” என்றனர்.
இந்நிகழ்வின் போது ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்கத்தை சேர்ந்த தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் ஜேக்கப் ஆரோக்கியம், செயலாளர் சையதுஹக்கீம்சேட் மற்றும் பட்டாதாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.