பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழக்கத்தில் இருந்த பழங்கால மரபுகள், பழைமையான கோவில்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
“மரபுநடை”என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் பள்ளி ஆசிரியருமான ராஜகுரு. அக்காலத்தில் இருந்த பழக்க வழங்கங்கள், சமய வழிபாட்டு முறைகளையும் இக்கால மாணவர்கள் அறிந்து கொள்ள, மாதத்தில் ஒரு நாளை தேர்வு செய்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால மரபுகளை பற்றி, அந்த ஊர்களுக்கே அழைத்து சென்று இவர் விளக்கி வருகிறார். அந்த வகையில் 10-வது மரபுநடை, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரிலும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு, நரிப்பையூரில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இப்போது பராமரிப்பின்றி காணப்படும் சிவன் கோவில் பற்றி விளக்கினார். அதேபோல், நரிப்பையூரில் உள்ள 3 மாலைக்கோவில்கள் பற்றியும், வேம்பாரில் உள்ள ஒரு மாலைக்கோவில் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.
இதுபற்றி வரலாற்று ஆய்வாளர் ராஜகுரு , “மாலைக்கோவில் என்றால், போர், பூசல் போன்ற இன்னபிற காரணங்களால் இறந்து போன பெண் நினைவாக 4 நடுகல் நட்டு அதன் மேல் கோவில் எழுப்புவது. அதேபோல், நிரை கவர்தல், மீட்டல், பன்றி, யானையுடன் சண்டையிடுதல் போன்ற காரணங்களால் இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துவதற்கு பெயர் மாலைக்கோவில். ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இந்த மாலைக் கோவில்களை பார்க்கலாம்”. என்றவர் தொடர்ந்து, “வட தமிழகத்தில் தீப்பாய்ஞ்ச அம்மன், சதிகல் என்று இந்த கோவில்கள் அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் இதற்கு மாலையடி, மாலைக்காரி, சீலைக்காரி என்று அழைப்பர். பெண் இறந்த பிறகு சாமியாக வழிபட்டுள்ளனர் அக்காலத்தில். நரிப்பையூரில் நாயக்கர் மற்றும் பாண்டியர் காலத்து மாலைக்கோவில்கள் இன்னமும் வரலாற்றை சுமந்து நிற்கும் எச்சமாய் நிற்கிறது. வேம்பாரில் உள்ள மாலைக்கோவில் என்பது, கணவனை நாகம் தீண்ட அவருடன் சேர்ந்து உயிர்நீத்த பெண்ணின் கதையை சுமந்து நிற்கிறது” என்கிறார்.
தொல்லியல்துறை மற்றும் சுற்றுலா துறை முற்றிலும் கைவிடப்பட்ட இந்த கோவில்களையும், மரபுச் சின்னங்களையும் அரசு பாதுகாத்தால் நன்றாக இருக்கும். பழைமையான மரபுகள் பாதுகாக்கப்படுவது அவசியம்.!