
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 10-ந்தேதி அதிகாலை, அங்கிருந்த போலீஸார் சற்று அசந்த நேரத்தில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டான் ஓர் ஆசாமி. ”ஸ்பிளண்டர் பைக்கில் வந்தவன் தான் வெடிகுண்டை வீசினார்” என்று அங்கு சென்ட்ரி டியூட்டியில் இருந்த போலீஸ்காரர் சொல்ல, இந்த விஷயம் மைக்கில் அலறியது. அந்த நேரத்தில் சிட்டி முழுக்க ஸ்பிளன்டர் பைக்கில் சென்றவர்களை மடக்கி விசாரித்தது காவல்துறை.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீஸார், பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை சுத்தமாகத் துடைத்து கிளீன் செய்தனர். பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா என்ற வினோத், சர்வசாதரணமாக நடந்து வந்தே, இந்தச் சித்து விளையாட்டை அறங்கேற்றியது தெரியவந்தது. இதற்கிடையே, இந்த வழக்கை என்.ஏ.ஐ.க்கு மாற்ற வேண்டுமென்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார்.
கருக்கா வினோத் வெடிகுண்டு வீச காரணம் என்ன? என்பதைக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கருக்கா வினோத்தைப் பொறுத்தவரை, நானும் ரவுடிதான் என்ற வடிவேலு கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிற கேரக்டரா இருக்கார். இப்படித்தான் 2015-ல் சவுத்போக் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடைமீது பெட்ரோல் குண்டு வீசினான். அப்ப ஒரு அரசியல் கட்சித் தலைவர் மதுக்கடையை மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார். அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ரூ.200 தான் கொடுத்தார். அதுக்காகவே டாஸ்மாக் கடையில் குண்டை வீசிட்டார். இப்ப அந்த மதுக்கடையையும் அங்கிருந்து எடுத்துவிட்டனர். அதனால், அந்த சம்பவத்தை இப்பவும் பெருமையா சொல்லிக்கிருவார். அதுக்கு அப்புறம் இன்னொரு ரவுடி தூண்டுதலின்பேரில், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசன் வாசல்ல பெட்ரோல் குண்டை வீசிட்டு ஓடிட்டார். தனிப்படை போலீஸார், அந்த ரவுடியின் வீட்டிற்குப் போய் விசாரணைங்கிற பேர்ல தொந்தரவு பண்ணியதால், போலீஸாரை மிரட்ட, அந்த ரவுடி தூண்டுதலின் பேரில் கருக்கா வினோத் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டை வீசினார்.
எப்பவுமே நம்மள டைம் லைன்ல வச்சிக்கிறனும்னு நினைக்கிறவர் இந்தப் பயபுள்ள. நேத்து கொஞ்சம் அசந்த நேரத்தில் இப்படி பண்ணிட்டான். நீட்டை பிஜேபி எதிர்க்குதுங்கிறான். பின்னாடி பிஜேபி ஆதரிக்குதுங்கிறான். அவனுக்கு நீட் தேர்வுன்னா என்னான்னே தெரியல. அவுங்க அப்பா, அம்மாவை விசாரிச்சோம். அவன் ஜெயிலுக்குள்ள தான் இருந்தான், இப்ப வெளியே வந்ததே எங்களுக்கு தெரியாதுங்குறாங்க. ஒய்பும் இவனை விட்டுட்டு வெளியூர் போயிடுச்சு. மத்தபடி இவன் என்.ஐ.ஏ. அளவுக்கு ஒர்த் இல்ல. தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்க்க இவனை யாரோ தூண்டி விட்டிருக்கனும். அதன் அடிப்படையில் விசாரிச்சுகிட்டு இருக்கோம்” என்றனர்.
கருக்கா வினோத்தின் வீடு இருக்கும் ஏரியாவிலும் விசாரித்தோம். ”அவனுக்கு கஞ்சா வாங்கவும் சரக்கு வாங்கவும் காசு கொடுத்தால் போதும், யார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசச் சொன்னாலும் வீசுவான். மத்தபடி உளவுத்துறை அளவுக்கு ஒர்த் இல்லைங்க அவன்..” என்கிறார்கள்.