திருச்சி மாவட்டம், குழுமணி அடுத்துள்ள அக்ரஹார பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவர், கடந்த 2013ஆம் ஆண்டு திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தனக்குச் சொந்தமான நிலத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து மாதம் தவறாமல் 6,000 ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கரோனா பரவலால் போதிய வருமானம் இல்லாமல் வட்டித் தொகையைச் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், தனியார் வங்கியைச் சேர்ந்த தவணை வசூல் செய்யும் பணியாளர்கள் மாரிமுத்துவின் வீட்டுக்கு நேரில் சென்று, இரண்டு மாத வட்டி தவணையைச் செலுத்தினால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து புறப்படுவோம் என்று அவரை அவதூறாகப் பேசியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த மாரிமுத்து, வசூல் பணியாளர்கள் வாசலில் அமர்ந்திருக்கும் போது வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களது உறவினர் வந்து வீட்டின் கதவைத் திறந்தபோது அவர் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தவணை வசூலிக்க வந்தவர்கள் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.