சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''காலங்காலமாக அரசு, ஆதீனங்கள், கடவுள் நம்பிக்கை, அரசியல் எல்லாம் சுகமாகத்தான் இருந்தது. அண்மையில் புதிதாக பாஜகவில் ஒருவர் வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் கொள்கை ரீதியாக அந்த கட்சிகள் சேர்ந்ததாக எனக்கு தெரியவில்லை. அவருடைய கடந்த கால பணி, அவர் அந்த பணியிலிருந்து நீங்கி அரசியல் கட்சியைத் தேடி, அதற்கப்புறம் அவருடைய சௌகரியத்திற்காக அரசியல் கட்சியில் சேர்ந்ததுள்ளதால் இப்பொழுது கொஞ்சம் இதையெல்லாம் குழப்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு சில சம்பவங்கள் நடக்கிறதே தவிர தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆன்மீகம், அரசியல், நாத்திகம், ஆத்திகம், பெரியார், பிள்ளையார் எல்லாருமே சுமூகமாக இருந்த ஊர். இந்த குழப்பங்கள் பத்திரிகைகளில் வேண்டுமானால் விவாதங்களாக இருக்கலாமே தவிர, சமுதாயத்தில் எந்தவித மாற்றத்தையும் எந்தவிதமான தாக்கத்தையும் கொண்டுவரும் என நான் நம்பவில்லை.
முதலில் நாங்கள் தாண்ட வேண்டிய கிணறு ஜனாதிபதி தேர்தல். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொதுவான வேட்பாளரை நிறுத்தி பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளரை தோற்கடித்து, அல்லது போட்டியில் நெருக்கமான முடிவே கொண்டுவந்தாலே அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கருதுவோம்'' என்றார்.