
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திட்ட அணைகளிலிருந்து ஜூலை 15- ஆம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 15/07/2020 முதல் 13/08/2020 வரை 30 நாட்களுக்கு, வினாடிக்கு 75 கனஅடி வீதம், 194.40 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோதையாறு பாசனத்திட்ட அணைகளில் இருந்து, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதுடன் 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.