காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள சுங்குவார்சத்திரம் என்ற பகுதியில் பாக்ஸ்கான் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலையில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதுார் பாக்ஸ்கான் ஆலையின் தங்கும் விடுதில் வழங்கப்பட்ட தரமற்ற உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக 17 மணி நேரம் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதைய மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டனர். இத்தகைய சூழலில் தான் இந்த ஆலையின் ஆட்சேர்ப்பின் போது திருமணமான பெண்களுக்கு பணி மறுக்கப்டுவதாகபுகார் எழுந்தது. இது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பாக்ஸ்கான் ஆலை மீண்டும் சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டிற்கு பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “சமீபத்தில் வேலைக்கு எடுத்தவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள். ஆட்சேர்ப்பின் போது புதிதாக வேலைக்கு சேர்க்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் திருமணம் ஆனவர்கள் ஆவர். திருமணம் ஆன பெண்களை வேலைக்கு எடுப்பது இல்லை என்ற நிபந்தனை தொழிற்சாலையின் கொள்கையே கிடையாது. ஆட்சேர்ப்பின் போது வேலைக்கு தேர்வு ஆகாத சிலர் இது போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பாலினம் மற்றும் மதம் பார்க்காமல் அனைத்து பணியாளர்களும் தங்கம் உள்ளிட்ட எந்த உலோக பொருட்களையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.