தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதால் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி ராஜினாமா செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
17-வது மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி தனது பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் என அனைத்தையும் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து ராஜிவ்காந்தி, “காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்த நான், வாசன் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கியபோது அந்த கட்சியில் இணைந்தேன். எனக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தார்கள். சிறப்பாக செயல்பட்டு வந்தேன்.
இந்த நிலையில் தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட பா.ஜ.கவுடன் இணைந்துள்ள அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதை என்னால் ஏற்கமுடியாது. என்னைப்போல் த.மா.காவில் உள்ள பலராலும் ஏற்கமுடியவில்லை. கட்சி தலைமைக்கு இந்த தகவலை சொல்லியும் எதுவும் நடக்கவில்லை. அதனால் என் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளேன். என்னைப்போல இன்னும் பலரும் வெளியேற வாய்ப்புகள் உள்ளது” என்றார்.