ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள மூலவர் சிலை உள்ளிட்ட பழங்கால சிலைகள் எல்லாம் மாயமாகிவிட்டது. காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் சிலைதடுப்பு பிரிவுக்கு விசாரிக்க சொல்ல இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது நீதிபதி ரெங்கராஜன் நரசிம்மனிடம் கோயிலுக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வீடியோ, போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்ப கூடாது என்று நீதிகள் அறிவுறுத்தினார்கள். இதனை அடுத்து வழக்கு வரும் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கடந்த 19-ம் தேதி வந்த ரங்கராஜன் நரசிம்மன், சேது அரவிந்த், காளிமுத்து, ராமசந்திரன், ஆனந்த் ஆகியோர் தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளே நுழைந்து வீடியோ புகைப்படங்கள் எடுத்து அதை பேஸ்புத்தகத்தில் பதிவு செய்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு களங்கத்தையும், புனித தன்மையை கெடுப்பதாகவும், இந்த செயல் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது எனவும் கூறப்பட்டது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை விசாரிக்கும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் உமாசங்கர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இவர்களிடம் தனித்தனி விசாரணை நடைபெறும் என்கிறார். விசாரணைக்கு பிறகே நடவடிக்கை பாயும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.