அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் முருகேசன் கூறியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வி.முருகேசன் இன்று பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் ஊழியர்கள் ஆசிரியர்கள் பிரச்சனையில் முழு கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்தபடும்.
மேலும் பல்கலைக்கழகத்தில் சட்டபடிப்பு தொடங்க விரைவில் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வகுப்பு நேரத்திலே பயிற்சிகள் அளிக்கப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க கேம்பஸ் இன்டரிவ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நான் துணைவேந்தர் என்று சொல்வதற்கு பதில் ஆசிரியர் என்று சொல்லி கொள்ளவே விரும்புகிறவன். எனவே வாரத்தில் ஒரு நாள் மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த உள்ளேன். அதே போல் ஆசிரியர்கள், ஊழியர்கள் அவர்களது வேலையை தவறாமல் செய்யவேண்டும். மாணவர்களின் கல்வியில் கவனம் செலுத்தி பல்கலைக்கழகத்தை கடந்த 15 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அதே போல் மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இங்குள்ள பிரச்சணைகளை போக்கும் விதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் உலக நாடுகளின் பல இடங்களில் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து சில உதவிகளை பெற்று பல்கலைக்கழகத்தை மேம்படுத்தப்படும். அதேபோல் மத்திய அரசிடம் ஆராய்ச்சிக்கான நிதிபெற்று ஆராய்ச்சி மாணவர்களை அதிகளவில் உருவாக்கப்படும், தொழில்துறையில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார். இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், கல்விக்குழு உறுப்பினர் திருவள்ளுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.