![jkl](http://image.nakkheeran.in/cdn/farfuture/QZWIOK7GCiIz34YcPDTCYghRq9AeCbR-MqE-LPTCtJY/1644600176/sites/default/files/inline-images/99_16.jpg)
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் 5 பவுனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி என அறிவித்தார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான நகைகள் வழங்கும் விழா ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள டிடி.595 காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர ஐ.பெரியசாமி கலந்துகொண்டார். மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது, "முதல்வர் அவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியான விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வோம் என அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் பெற்றவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. கரோனா நிவாரண நிதி வழங்கிய பின்பு அதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறையின் மூலம் பொது நகைக்கடன் (2021) தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அவர்களுக்குரிய நகைகளையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பயனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பொது நகைக்கடன் 50 ஆயிரத்து 120 பயனாளிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இன்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும், நகைகளும் வழங்கப்பட உள்ளது. சட்டமன்றத்தில் பலமுறை யார்யாருக்கு நகைக்கடன் வழங்கப்படும் என்பதை சுட்டி காட்டியுள்ளேன்.
அதன்படி தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 கடன்தாரர்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 பயனாளிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டு நகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் தகுதி உள்ள நபர்கள் விடுபட்டு போயிருந்தால் எப்போது வேண்டுமானாலும் தகுந்த ஆதாரங்களை கொடுத்து நகைக்கடன் தள்ளுபடியை பெறலாம்.
இந்த காமாட்சிபுரம் கூட்டுறவு சங்கம் அருகில் தேர்தல் நடக்கும் பேரூராட்சியிலிருந்து 5 கி.மீ தூரத்திற்கு அதிகமாக உள்ளது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி ஏற்கனவே அறிவித்த நலத்திட்டம் என்பதால் இன்று இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மட்டும் 103 பயனாளிகள் பயன் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ரூ.50 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்