மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட ரூ.50.80 கோடி ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டது. இன்று நினைவுமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஒன்றாக இணைந்து அடிக்கல் நாட்டினர். இவர்களுடன் அ.தி.மு.க அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி .ஆர். நினைவிடத்திற்கு பின்பு புதைக்கப்பட்டுள்ளது. தற்போது அதே இடத்தில் நினைவிடம் சுமார் 36,806 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது. இந்த நினைவுமண்டபத்தின் மாதிரி புகைப்படங்களும் இன்று வெளியிடப்பட்டது. இந்த நினைவுமண்டபம் ஃபீனிக்ஸ் பறவை தோற்றத்தில் உள்ளது. 36,806 சதுரடி பரப்பளவில் 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அருங்காட்சியகம், 8ஆயிரம் சதுர அடியில் அறிவுசார் மையம் , 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் செடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதி, ஆயிரத்து 260 சதுர மீட்டரில் நினைவிடம் மீதமுள்ள இடங்களில் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் அமையவுள்ளது.