Skip to main content

சமூக ஆர்வலர் ஜாபர் அலி படுகொலை; ஜவாஹிருல்லா கண்டனம்! 

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
Jawahirullah condemns the incident of social activist Zafar Ali

சமூக ஆர்வலர் ஜாபர் அலி சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜாபர் அலி, அந்தப் பகுதியில் இயற்கை வள பாதுகாப்பு மற்றும் கனிம வளங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தவர். கனிம வளங்கள் கொள்ளையடிப்பதை தடுப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டவர். கடந்த வாரம் மாவட்ட ஆட்சியாளர் அவர்களைச் சந்தித்து கனிமவளம் கொள்ளை போவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சமூக விரோதிகள் அவர் மீது லாரி ஏற்றி படுகொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் சமூக ஆர்வலர்களின் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியர் மற்றும் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் மெத்தனப் போக்குதான் இந்த படுகொலைக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது எனலாம்.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அத்தனை பேரும் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது போன்று இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் வேறு எவரும் பாதிக்கப்படாத வண்ணம் காவல்துறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த சமூக ஆர்வலர் ஜாபர்அலி குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடும் அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்