சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கையகப்படுத்தும் நிலத்தில் ஏரிகள், குளங்கள் இருப்பதால் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், 910வது நாளாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.
விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளை விதித்து போராட்டக்காரர்களை இன்று (20-01-25) சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. அதன்படி, இன்று பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், பரந்தூர் மக்களை விஜய் இன்று சந்தித்துப் பேசினார். மேலும் அவர், பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.