சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் குடியிருப்புகள், விளைநிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கையகப்படுத்தும் நிலத்தில் ஏரிகள், குளங்கள் இருப்பதால் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், 910வது நாளாக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார். விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளை விதித்து போராட்டக்காரர்களை இன்று (20-01-25) சந்திக்க காஞ்சிபுரம் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. அதன்படி, இன்று பொடவூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் வந்தார். அவரை சுற்றி ஏராளமான மக்கள் இருந்தனர்.
பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே பேசிய விஜய், “கிட்டத்தட்ட 910வது நாட்களுக்கு மேலாக உங்கள் மண்ணுக்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசினார். அந்த குழந்தையோடு பேச்சு மனதை ஏதோ செய்துவிட்டது. உடனே உங்கள் எல்லோரையும் பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது. உங்கள் எல்லார் கூடவும் தொடர்ந்து துணை நிற்பேன் என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு வீட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டின் பெரியவர்கள் தான். அதே போல் இந்த நாட்டின் முக்கியமானவர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான். அதனால், உங்களை மாதிரி விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான், என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது தான் என்று எனக்கு தோன்றியது.
உங்களுடைய மகனாக, என்னுடைய கள அரசியல் பயணம் உங்களின் ஆசீர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. நம்முடைய முதல் மாநில மாநாட்டில் நம்முடைய கட்சியினுடைய கொள்கையைப் பற்றி எடுத்து சொன்னேன். அதில் ஒன்று தான் இயற்கை வளப்பாதுகாப்பு, சூழலியல் மற்றும் காலநிலையை எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊருவிளைவிக்காத பகுதிசார் மாநில பரவலாக்கம். இது தான் நம்முடைய கட்சியின் கொள்கை. இதை நான் இங்கு வாக்கு அரசியலுக்காக சொல்லவில்லை. விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம் என்ற கொள்கையையும் மாநாட்டில் சொன்னேன். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலங்களை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக மாற்றும் இத்திட்டத்தை, ஒன்றிய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அதுமட்டுமல்லாமல், இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காவும் விவசாயிகள் பாதிக்கும் இந்த திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி இருந்தேன். அதை இங்கு, உங்கள் முன்னாடி ரொம்ப வலிமையாக வலியுறுத்துகிறேன். இந்த பிரச்சனையில் உங்களோடு நான் உறுதியாக நிற்பேன். ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையமே வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன். இதை நான் சொல்லவில்லை என்றால், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் என்று கதையை கட்டி சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இன்றைக்கு இந்த பூமியில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களை புவிவெப்பமாகுதல் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக தான் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சிட்டி வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் காரணமே, சுற்றியுள்ள சதுப்பு நிலத்தையும் நீர்நிலங்களை அழித்தது என்று சமீபத்தில் வெளிவந்த அறிக்கை ஒன்று கூறுகிறது. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது 90 சதவீத விவசாய நிலங்களை அழித்து பரந்தூர் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்று எடுக்கும் அந்த முடிவு எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும். சமீபத்தில் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கணிம வளம் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து தமிழக அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தான் பரந்தூர் பிரச்சனையிலும் எடுத்திருக்க வேண்டும். எப்படி அரிட்டாப்பட்டி மக்கள் நம் மக்களோ அதே போலே தானே பரந்தூர் மக்களும் நம் மக்கள். அப்படி தானே ஒரு அரசாங்க யோசிக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. ஏனென்றால், இந்த விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் ஏதோ வகையில் ஒரு லாபம் இருக்கிறது. அதை நம் மக்கள் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டு வழித் துறைமுகத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா?. உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் உங்களுடைய வசதிக்காக அவர்களோடு நிற்கிறதும், அவர்களோடு நிற்காமல் இருக்கிறதும், நாடகம் ஆடுறதும் நாடகம் ஆடாமல் இருக்கிறதும்.. அது சரி, நம்புற மாதிரி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே. அதையும் மீறி விவசாயிகள் போராட ஆரம்பித்தால் பிரச்சனை தான். அதனால் இனிமேல் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்களுடைய விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நான் கேட்டுக் கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடங்களை பார்த்து உங்களுடைய விமான நிலையத்தை கொண்டு வாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம், ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவு மக்களை ரொம்பவே பாதிக்கும்.
உங்களுடைய கிராம தேவதைகளான கொள்ளம்பட்டாள் அம்மன் மேலையும், எல்லையம்மன் மேலையும் ரொம்பவே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையை இழந்திர வேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும், உங்கள் வீட்டு பிள்ளையான நானும், த.வெ.க தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன். ஏகனாபுரத்திற்குள் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இங்கே தான் அனுமதி கொடுத்தார்கள். நான் ஏன் ஊருக்குள் வர தடை என்று தெரியவில்லை. இப்படிதான் நம்ம புள்ளைகள் ஒரு நோட்டீஸ் கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். ஒரு துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. அதனால், உறுதியாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசினார்.