பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவரைத் தாக்கி காலில் விழ வைத்து சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வசித்து வரும் சிறுவன், கடந்த புரட்டாசி மாதம் சங்கம்பட்டி பார்வதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடனம் ஆடியுள்ளார். அப்போது, அவர், தான் அணிந்திருந்த வேட்டியை மடித்துக்கட்டி ஆடியதாகக் கூறப்படுகிறது. இதனை கண்ட மாற்று சமூகத்தைச் சிலர், சிறுவனின் சாதியைச் சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். இதனால், சிறுவனின் தரப்பினருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர். அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி அந்த சிறுவனை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, சிறுவனை கடுமையாக தாக்கி அனைவரின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்குமாறு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், சிறுவன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்த சிறுவன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியலின சிறுவனை கடுமையாக தாக்கி சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.