Skip to main content

மாணவர்கள் போராட்ட எதிரொலி; அரசாணை வெளியீடு! - ஆனந்த கண்ணீர்விட்ட மாணவர்கள்!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை, இந்த கல்லூரியிலும் வசூலிக்க வேண்டி தொடர்ந்து 58 நாட்களாக அறவழியிலும் நூதனமான முறையிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் போராட்டக் களத்திற்கு வந்தும், காணொளி காட்சி மூலமும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.  இந்த நிலையில், மாணவர்களின் 58- வது நாள் போராட்டத்தில் தமிழக அரசு இன்று (04/02/2021) மாலை, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டுள்ளது. 

 

இதனை அறிந்த போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பலருக்கு மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வந்தது. அதேநேரத்தில் இதற்காகக் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், தற்போது மாணவர்களுக்கு விடுதியில் உணவு இல்லை. எனவே நாளைக்கே மருத்துவக் கல்லூரிக்கு உடனடியாகப் பணிக்குச் செல்ல தயார் எனவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

 

மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வெளியான தமிழக அரசின் ஆணை மாணவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்கள் அல்லாத பொதுமக்கள் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்