ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது மாயாகுளம். இந்த மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ( ரிசர்வ் தொகுதி ) பதவிக்கு மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர். அதாவது மாயாகுளம், புதுமாயாகுளம், பெரிய மாயாகுளம், தொண்டாலை மேலக்கரை, பாரதிநகர், விவேகானந்தபுரம், கிழக்கு மங்களேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 4980 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று புதுமாயாகுளம் மற்றும் பெரியமாயாகுளம் பகுதிகளில் 1680 வாக்குகள் உள்ளன. இங்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலீப்களில் மாயாகுளம் என்று இல்லாமல் அதற்க்கு பதிலாக அருந்ததியர் காலணி என்று உள்ளதாக கூறி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து வாக்களிக்கமாட்டோம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த தாசில்தார் வீரராஜா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கபாண்டியன், ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இப்போது வாக்களியுங்கள், பின்னர் தவறு சரிசெய்து கொள்ளப்பட்டும் என்றார்.அதற்கு அப்பகுதி பொதுமக்கள் நீங்கள் சரிசெய்து கொடுங்கள் இல்லையென்றால் வாக்களிக்கமாட்டோம் என்று கூறி கலைந்து சென்றுவிட்டனர்.
இதேபோல் பெரிய மாயாகுளம் பகுதிகளிலும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் ஊரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதி சேர்ந்த பேராசிரியர் கபீர் கூறுகையில், "கடந்த தேர்தல்கள் அனைத்திலும் மாயாகுளம், பெரிய மாயாகுளம் என அச்சிடப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை ஊர் பெயர் மாற்றி வந்துள்ளது. இது அதிகாரிகள் அலட்சியமாகவும், பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.
இந்த தவறை யார் செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும் அதிகாரிகளிடம் நாங்கள் எங்கள் உரிமைகளை தான் கேட்கிறோம். நாங்கள் சாலை மறியலில் ஈடுபடவில்லை,சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதிகாரிகள் ஏன் எங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை, ஊரின் பெயரை மாற்றினால் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறினார். இவ்வாறு அதிகாரிகள் செய்த தவறினால் இன்று பொதுமக்கள் வாக்களிக்காமல் சென்றுவிட்டனர். இதனால் வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது.