![Is it the duty of the police to carry out retaliatory measures Annamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/lGNzlP8eWJ4knCsO4D5aGpXaOlXNL8hB6t8PJQVJcoY/1690605139/sites/default/files/inline-images/padma_0.jpg)
பிரபல பதிப்பாளரான கும்பகோணத்தைச் சேர்ந்த பத்ரி சேஷாத்ரி பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களிலும், யூடியூப் சேனல்களுக்கும் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருவார். அப்படி அவர் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகப் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர், ‘மணிப்பூர் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்’ என்று பேசியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்தப் புகாரை ஏற்ற பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை சென்னையில் வைத்துக் கைது செய்தனர். மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பத்ரி சேஷாத்ரி கைது குறித்து பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டரில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது திமுக அரசு. திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா” எனப் பதிவிட்டுள்ளார்.