இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் சூழல் நிலவும் நிலையில் இஸ்ரேலில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றித் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் அயலகத் தமிழர் நல வாரியத்தை தொடர்பு கொண்டனர். 15 தமிழர்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல் தெரிவித்தனர். இவர்கள் 15 பேரும் ஜெருசலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு தொலைப்பேசி மூலம் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வேறு யாராவது இருந்தாலும் அயலகத் தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டால் இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர்களுக்குத் தேவையான உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தமிழக அரசு சார்பில் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரும் இஸ்ரேலில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாடு அரசைத் தொடர்பு கொள்ள +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இணையதளங்களின் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.