திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமியின் பேரனும், திமுகவின் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் கலாநிதியின் மகன் சித்தார்த். காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் சட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று இரவு, தனது காரில் நண்பர்களுடன் சென்னை எழும்பூர் பகுதியில் வந்து கொண்டிருந்தார் சித்தார்த்.
எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்றது அவரது கார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் மீது எதிர்பாராதவிதமாக சித்தார்த்தின் கார் மோதியது.
இதில் உதவி ஆய்வாளர் ஜெயபாலன் படுகாயம் அடைந்திருக்கிறார் உடனடியாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் ஜெயபாலன்.
இந்த விபத்து குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் தரப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சித்தார்த்தின் காரை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அத்துடன் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தகவல், ஆற்காடு வீராச்சாமி உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்களுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, திமுகவினர் எடுத்த முயற்சியில், காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் சித்தார்த்.