சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்து கண்டன முழக்கம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு எட்டு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை ஏழாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற இருந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள வந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிதம்பரத்தில் இருந்து சீர்காழிக்கு சாலை மார்க்கமாக காரில் வந்தார். எருக்கூர் ரவுண்டானா பகுதியைக் கடந்தபோது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் துணைச் செயலாளர் குமரேசன் தலைமையில் மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றிய செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் ஆகியோர் கருப்புக் கொடி காட்டி முழக்கமிட்டனர்.
“ஆளுநரே திரும்பி போ, ஆர்.என். ரவியே திரும்பி போ” என முழக்கமிட்டனர். உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து டாட்டா ஏசியில் எடுத்துச் சென்றனர். ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.