
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஊழை முறைகேட்டை கண்டித்து அதிமுக பட்ஜெட் கூட்டத்தொடரைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நேற்றைய தினம், ஒரு செய்தி பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் வந்துள்ளன, அமலாக்கத்துறை ஒரு செய்தியை வெளியிட்டது, அதில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிவடைகின்ற பொழுது, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது.
இந்த அரசு அதைப்பற்றி எந்த ஒரு செய்தியும் இதுவரை வெளியிடவில்லை. அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி , அந்த ரெய்டு மூலமாக 1000கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டும், இந்த அரசு எந்த செய்தியும் வெளியிடப்படாத காரணத்தினால், அதை நாங்கள் சட்டமன்றத்திலே குறிப்பிட்டு இதற்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.