
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14-03-25) தாக்கல் செய்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது பட்ஜெட் உரையாற்றிய உடனே அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பொய்யான தகவலை தமிழக முதல்வர் வெளியிட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் ரகசியம் தனக்கு தெரியும் என உதயநிதி ஸ்டாலின் சொன்னார். ஆனால், கடைசி வரை அந்த ரகசியத்தை சொல்லவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. உச்சநீதிமன்றத்தில் நீட் தொடர்பாக வழக்கு தொடர்பு இருப்பதால் நீட்டை ரத்து செய்ய முடியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த கூட்டத்தொடரில் கூறி அதற்கு மூடு விழா நடத்திவிட்டார். இது தான், திமுக அறிவிப்பினுடைய லட்சணம். பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக் கடன் ரத்து வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இன்றைய முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்துவதில் தான் முனைப்புக் காட்டி வருகின்றனர். இந்த ஆட்சி வெறும் விளம்பரத்தில் தான் ஒடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் இன்றைய முதல்வர். இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது. அந்த சாதனையை இன்றைய முதல்வர் படைத்திருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.