“இந்த வேலை பார்ப்பதற்காகவா மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் சம்பளம் தருகிறது?” என்று கேட்டார் சென்னை காவல்துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர். ‘கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்..’ என்று நாம் கேட்க, அவர் புலம்பித் தீர்த்தார்.
“சென்னை மாநகரில் சில காவல் நிலைய ஆய்வாளர்களின் ஆட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அனைத்து வேலைகளையும் நாங்களே பார்க்க வேண்டியதிருக்கிறது. இன்ஸ்பெக்டர் அய்யாக்கள் ஸ்டேஷனில் தூங்குகிறார்கள். அல்லது, ஏதாவது லாட்ஜில் போய் படுத்துக்கொள்கிறார்கள். இதுபோன்றவர்களை மேலதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கீழ்மட்ட காக்கிகளிடம் இத்தகைய சலிப்பு அதிகமாகிவிட்டது.” என்று பொத்தாம் பொதுவாகப் பேசியவர், “சாம்பிளுக்கு ஒரு இன்ஸ்பெக்டர்..” என்று ஒருவரின் தவறான நடவடிக்கையைக் குறிப்பிட்டார்.
அந்த இன்ஸ்பெக்டர் குறித்து அவர் கூறியதை நீக்குபோக்காக இங்கே தந்திருக்கிறோம்.
சென்டர் ஆப் த சிட்டியில் தற்போது பணிபுரியும் அந்த இன்ஸ்பெக்டர் இதற்குமுன் நீலமானகரையில் இருந்தார். அப்போது, வழக்கு ஒன்றிற்காக வந்த விதவை ஒருவரைப் பேசிப்பேசியே தனதாக்கிக் கொண்டார். தற்போது அவர் வேலை பார்க்கும் லிமிட்டிலேயே, ‘சின்னவீடு’ ஒன்றைப் பிடித்து தங்க வைத்திருக்கிறார். அவ்வப்போது அங்கு போய் தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்கிறார். தான் கெட்டதோடு விடாமல், அரசு சம்பளம் பெறும் ஏட்டையா ஒருவரையும், இந்தக் காரியத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறார். எப்படியென்றால், ‘ஆனைமுகன்’ பெயர் கொண்ட அந்த மீசைக்கார ஏட்டையாவை, அந்த விதவைக்கும் அவருடைய மகனுக்கும் தேவையான உதவிகளைச் செய்வதற்கென்றே வைத்திருக்கிறார். அந்த ஏட்டையாவும், அய்யாவின் கட்டளைக்குக் கீழ்படிந்து அத்தனை சேவைகளையும் ஆற்றிவருகிறார். தன்னுடைய பெர்சனல் சமாச்சாரத்துக்கு துணைபோவதற்காக, விடுப்பு மற்றும் பணியில் சலுகை என அந்த ஏட்டையா மீது மட்டும் கருணை மழை பொழிகிறார். இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கின்ற சக காவலர்கள் எந்நேரமும் இதுகுறித்துப் புறம்பேசும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
சென்னை கமிஷனர் குடியிருக்கும் ஏரியாவிலேயே சின்ன வீடு வைத்திருக்கும் அந்த இன்ஸ்பெக்டரின் சாமர்த்தியத்தை அவரது நட்பு வட்டம் மெச்சிக்கொண்டிருக்கிறது. சிலரோ, ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லை..’ என்று நொந்துபோய் இருக்கிறார்கள்.
அந்த ‘….ஷ்’ இன்ஸ்பெக்டர் நம் லைனுக்கு வராத நிலையில், மீசைக்கார ஏட்டையாவை நம்மால் தொடர்புகொள்ள முடிந்தது. “பசங்கள காலேஜ்ல சேர்க்கிறதுக்கே அவரு எனக்கு லீவு தரல. என்னோட வலி எனக்குத்தான் தெரியும். எல்லாம் அந்தக் கடவுளுக்குத் தெரியும். இன்ஸ்பெக்டர் உங்க போனை அட்டென்ட் பண்ணலியா? நான் சொல்லுறேன். அவரு உங்ககிட்ட பேசுவார்.” என்றார். ஆனால், அந்த இன்ஸ்பெக்டர் எந்த விளக்கமும் அளித்திட முன்வரவில்லை.
மக்களைக் காக்க வேண்டிய கம்பீரமான பணியில் இருந்துகொண்டு சிலர் பார்க்கின்ற தகாத வேலைகள், அந்தத் துறைக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.