
தமிழ்நாடு மாநில அரசின் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த 6ஆம் தேதி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், மதுபானங்கள் இடமாற்றம் தொடர்பான பதிவுகள், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர், சில மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆர்டர்கள், டாஸ்மாக் விற்பனை நிலையங்களால் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் 30 கூடுதல் கட்டணம் வசூலித்தது போன்ற முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளில் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை நேற்று (13-03-25) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (14-03-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒன்றிய அரசு வீண் பழி சுமத்துகிறது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று தமிழக முதல்வர் எடுத்திருக்கூடிய நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, அமலாக்கத்துறையை ஏவி தமிழ்நாடு டாஸ்மாக்கில் சோதனை நடத்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் முழுவதுமாக தெரிவிக்கப்படவில்லை. பணியிட மாற்றங்கள் குடும்ப சூழ்நிலைகள், மருத்துவ காரணங்களால் போன்றவற்றால் டாஸ்மாக் நிறுவனத்தால் வழங்கப்படக் கூடிய பணியிட மாற்றம். அதில் எந்தவித தவறும் இல்லை, ஆனால் தவறுகள் நடந்தது மாதிரியான தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
டிரான்ஸ்போர்ட்டுக்கான டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் கொடுக்கப்பட்டது. அதில் எந்தவித முறைகேடுகளோ, மாற்றுக்கருத்துக்கோ இடமில்லை. அதில் ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், பாட்டில் கொள்முதலுக்கும் இடையில் நடக்கும் வணிகம் என்பது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வெளியில் நடக்கக்கூடியவை. இந்த 4 ஆண்டுகளில் பார் டெண்டர்களாக இருந்தாலும், அது முழுவதுமாக ஆன்லைன் டெண்டர்களாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லி இருக்கக்கூடிய ரூ.1000 கோடி முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ரூ.1000 கோடி என்பதை முன்னதாக ஒருவர் சொல்கிறார். பின்னர், அமலாக்கத்துறை அதே ரூ.1000 கோடி என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இதில் 1000 அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். அமலாக்கத்துறை சோதனைகளை டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பொறுத்தவரை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வெளிப்படைத்தன்மையுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.