கரோனா தொற்று காலமான தற்போது அனைத்துத் தொழில்கள் உட்பட மனித வாழ்க்கையும் ஸ்தம்பித்துப் போனதுடன் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த சைக்கிள் கேப்பைப் பயன்படுத்திக் கொண்டு போலிச் சரக்குகள் வட்டமிடத் தொடங்கிவிட்டன.
காரணம் பழக்கத்திற்கு அடிமையானதுதான். மதுக் கிடைக்காதவர்கள் மாற்றுச் சரக்குத் தேடி அலைகின்றனர். அதே போன்று புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அவை கிடைக்காமல் தவிக்க, அங்கு போலி வஸ்துகள் நுழைவது உயிரைக் காவு கொள்ளும் கொடூரன் என்பது கூடத் தெரியாமலேயே போய்விடுகிறது. ஏனெனில் இந்தப் போலிகள் மெல்லக் கொல்லும் விஷமான ஸ்லோ பாய்ஸன். அப்படித்தான் போலி பீடிகள் தற்போது சரக்குடன் சிக்கியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எஸ்.ஐ. தினேஷ் பாபு தலைமையிலான போலீஸ் டீம் தங்களின் எல்லைப் பகுதியில் கண்காணிப்பிலிருந்த போது ஒரு ஜீப் மற்றும் லோடு வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரைக் கண்டவுடன் வாகனங்களை நிறுத்திவிட்டுத் தப்பியோடினர். அவர்களைப் போலீசார் விரட்டியதில் மூவர் சிக்கினர். ஒருவர் தப்பியிருக்கிறார்.
மேற்கொண்டு அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில் ஒரு லட்சம் மதிப்பிலான 13 பண்டல்களைக் கொண்ட பிரபல நிறுவனங்கள் பெயரிலான போலி லேபில் பீடிகள் சிக்கியுள்ளது. கடத்தப்பட்ட அந்தப் போலி பீடிகள் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவைகளைப் பறிமுதல் செய்ததுடன் சுரண்டை அருகிலுள்ள இரட்டைக்குளம் அருணகிரி, சிவகாசியைச் சேர்ந்த கண்ணன், ஆலங்குளம் செல்வராஜ் ஆகியோரைக் கைது செய்தனர். தப்பியவர் தேடப்படுவதுடன், கைதான அருணகிரி மீது ஏற்கனவே போலி பீடிகள் கடத்திய வழக்குகள் இருப்பதாகச் சேர்ந்தமரம் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
புகை பிடிப்பது கெட்ட பழக்கம். அது கேன்சரை வரவழைக்கும் என்று அவைகளில் குறிப்பிடப்படுவது வாடிக்கை தான். ஆனால் போலிகள் உயிரையும் குடிக்கலாம். எவர் கண்டது.