ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் எம்.வினோத் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஆன்லைன் விளையாட்டுகளை பல நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன. கடந்த 2000-ஆம் ஆண்டு, பொழுதுபோக்கிற்காக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டு, தற்போது பணத்துக்காக விளையாடும் சூதாட்டமாக பல நிறுவனங்கள் மாற்றிவிட்டன. இந்தச் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த மத்திய, மாநில அரசுகளிடம் சட்டம் எதுவும் இல்லை. அதனால், இந்தியாவில் எந்த உரிமத்தையும் பெறாமல், நம்முடைய சைபர் இடத்தை வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் பயன்படுத்தி, இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்துகின்றன. இந்தத் தொழிலில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகின்றன.
ஒரு விளையாட்டு என்றால், மனதை அல்லது உடலை வலிமைப்படுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஆனால், இந்த விளையாட்டில் அப்படி கிடையாது. பல இளைஞர்கள் இந்தச் சூதாட்ட விளையாட்டில் பணத்தை மட்டும் இழக்கவில்லை. மன ரீதியான பாதிப்பினால், தற்கொலை செய்து, தங்களது விலைமதிக்க முடியாத உயிர்களையும் இழக்கின்றனர். இளம் வயதினரின் இந்த நிலையை உணர்ந்த பல மாநில அரசுகள், இந்த விளையாட்டைத் தடை செய்து வருகின்றனர்.
இதுபோன்ற விளையாட்டுகளைத் தடை விதிப்பதற்கு மாநில அரசுகளுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தெலுங்கானா, ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, நாகாலாந்து போன்ற மாநிலங்கள் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது. எனவே, இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தொடர அனுமதித்தால், இது நம் நாட்டின் பொருளாதாரத்துக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இளைய சமூகத்தினர், மற்றும் குழந்தைகளை அடிமையாக்கி, பல குடும்பங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும். மேலும், இந்தச் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ஏ.ஜான்பிரிட்டோ ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.