சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஒன்றியக்குழுவில் மொத்தம் 13 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. முதல்கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாரமங்கலம் ஒன்றியத்தில், திமுக 4, பாமக 4, அதிமுக 2, தேமுதிக 1 இடத்திலும் வெற்றி பெற்றன. தவிர, சுயேச்சைகளும் 2 இடங்களை வென்றனர்.
இதையடுத்து, ஒன்றியக்குழுத் தலைவர் பதவியில் அமர எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஜானகி சதீஸ்குமார் என்பவரை, அதிமுகவைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்றதாக மாவட்ட எஸ்பி தீபா கனிகர் மற்றும் தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் சனிக்கிழமை (ஜன. 11) மறைமுகத் தேர்தல் நடந்தது. அங்கு அசம்பாவிதங்களை தவிர்க்க, காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். என்றாலும், திடீரென்று தாரமங்கலம் ஒன்றியத்தில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் கூறினர்.