சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகளில் சிறுத்தை புலிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டதோடு காட்டை விட்டு கீழே சமவெளி பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வரத்தொடங்கி விட்டது. மலை பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வருவாய்க்காக ஆடு வளர்க்கிறார்கள் அவ்வாறான ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடுவதாக மக்கள் கூறுகிறார்கள்.
![increasing leopard's disturbance](http://image.nakkheeran.in/cdn/farfuture/wVSk-GHirOb_ek1AoPFFitsblj0ThxTgZ8F2RWxiUvI/1574427333/sites/default/files/inline-images/leopard%20std.jpg)
பவானிசாகர் அருகே உள்ள பசுவபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் 5 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இரவு நேரத்தில் ஆடுகளை பசுவபாளையம் கிராமத்தில் உள்ள தனது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒரு சிறுத்தை பசுவபாளையம் கிராமத்தில் புகுந்து சுப்பிரமணிக்கு சொந்தமான பட்டியில் உள்ள 3 ஆடுகளை அடித்துக்கொன்று ருசித்தது.
கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஊருக்குள் நுழையும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணித்த உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து பவானிசாகர் வனத்துறையினர் நேற்று சிறுத்தையை பிடிப்பதற்காக கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் ஆடு அல்லது நாய் கட்டி வைத்து இரவு நேரத்தில் வனத்துறை பணியாளர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததால் கிராம மக்கள் ஒரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
இதனிடையே சத்தியமங்கலம் வனப்பகுதியான புதுக்குய்யனூரில் மீண்டும் ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து தூக்கிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் கிராமம் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இங்கு மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. விவசாயியான மூர்த்தி தனது தோட்டத்தில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை மூர்த்தி தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் ஒரு ஆடு காணாமல் போயிருந்தது. அந்த இடத்தில்.ஆட்டுு ரத்தம் சிதறிியிருந்தது. ஏற்கனவே இப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் உடனடியாக அவர் பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சிறுத்தை ஆட்டை அடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றிக்கிறது என்பதை வனத்துறையினர் சிறுத்தையின் கால்தடம் மற்றும் வனப்பகுதியில் ஆட்டின் உடல் பகுதியை வைத்து உறுதிப்படுத்தினார்கள். ஆடுகளை ருசி பார்த்த சிறுத்தைகள் மனிதர்களைை கண்டால் விட்டு வைக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் மலையையொட்டி வாழும் மக்கள்.