![incident in theni](http://image.nakkheeran.in/cdn/farfuture/CEVbKjWU0UrtlXkaGzrPEXnptVZke41ue2Y0xrOunkY/1596292492/sites/default/files/inline-images/cxcgdgd.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனியில் கரோனாவால் உயிரிழந்த தாயின் உடலைத் தள்ளுவண்டியில் கிடத்தி மகன் தள்ளிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
தேனியில் கடந்த சில நாட்களாகவே கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களை ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லவும் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
தேனியில் ஒரே நாளில் நான்கு, ஐந்து பேர் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆம்புலன்ஸுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று தேனி, கூடலூரில் கரோனாவால் உயிரிழந்த தாயின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால், தாயின் மகனே தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது உடலை எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.