Skip to main content

குடிபோதையில் தகராறு செய்த மகனை தீர்த்துக்கட்டிய தந்தை!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

incident in salem

 

சேலம் அருகே, குடிபோதையில் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை, தந்தையே அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் மணி (65). விவசாயி. இவருடைய மனைவி மாது. இவர்களுடைய மகன் கலையரசன் (38). விவசாயியான கலையரசனுக்கு இளமதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். தந்தை, மகன் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு இருவரின் மனைவியரும் பிரிந்துசென்று விட்டனர். இதனால், ஒரே வீட்டில் தந்தை, மகன் மட்டுமே வசித்து வந்தனர். 

 

எப்போதும் போதையில் வீட்டுக்கு வரும் கலையரசன், தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை (ஏப். 1) இரவு, மது குடிக்க பணம் வேண்டும் என்று தந்தையிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே குடித்த மதுவின் போதையே தெளியவில்லை. அதற்குள் பணம் கேட்கிறாயா? என்னால் பணம் தர முடியாது. பணமும் கையில் இல்லை என்று மணி கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு, ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. பின்னர், அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். இதையடுத்து கலையரசன் தூங்கச் சென்றுவிட்டார்.

 

கோபத்தில் இருந்த மணி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகனை சரமாரியாக வெட்டினார். கலையரசனுக்கு மார்பு, தாடை, கால் ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் நங்கவள்ளி காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

மணியை காவல்துறையினர் கைது செய்தனர். மகனுடன் நடந்த கைகலப்பில் மணியின் உடலிலும் லேசான காயங்கள் இருந்ததால் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குட்டப்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்