திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (11/11/2022) நடந்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டனர். மதுரையிலிருந்து திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வழியனுப்பி வைப்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அருகருகே நின்றனர். இருவரும் அருகருகே நின்று கொண்டு பிரதமரை வழியனுப்பி வைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதே நேரத்தில் அரசியல் தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “நேற்று பிரதமர் மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்குப் பங்கேற்க வந்தார். அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி சென்றார். அவரைக் கண்டதும் ஹௌ ஆர் யூ (how are you) என்று ஆங்கிலத்தில் விசாரித்தார். அதை அருகிலிருந்து பார்த்தேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஃபைன் என்று சொன்னார். அதற்குப் பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை.
அதன் பின் அனைவரிடத்திலும் மலரை வாங்கிக் கொண்டு கடந்து சென்றார். பிரதமர், ஆளுநரிடம் சால்வையினை பெற்றுக்கொண்ட பின் எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமே பேசினார். இதுதான் அங்கு நடந்தது. அதேபோல் தான் வழியனுப்பும் போதும் நாங்கள் இருந்தோம். முதல்வரும் அங்கு வந்திருந்தார்.
பிரதமர் திரும்பிச் செல்கிறபோது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தள்ளி நின்றபோது அவரை உடன் அழைத்தார். தமிழக பாஜகவில் வயது முதிர்ந்த தொண்டரைப் பார்த்ததும் அவரது கையினை எடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார். இவை எல்லாம் நடந்தது. அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியிடம் மட்டும்தான் பேசினார்.