![incident in pudukottai](http://image.nakkheeran.in/cdn/farfuture/J5cg3sVafy0dyXaVguCrR58RN85PT0-OiG8zQJI7ImI/1591295594/sites/default/files/inline-images/zxvxzvxvx.jpg)
கடந்த மாதம் தஞ்சையில் வரதட்சனை கேட்டு தன்னை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் மனிதாபிமானமே இல்லாமல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார் மாமியார் என்று இளம் பெண் மரண வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் சரகம் மணியம்பள்ளம் கிராமத்தில் அரங்குளவன் மனைவி மூதாட்டி ராஜம்பாள் (வயது 58). 90 சதவீதம் தீ காயங்களுடன் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜம்பாள் உயிரிழந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ராஜம்பாளின் மருமகள் பிரதீபா (வயது 23) மற்றவர்களுக்கு சந்தேகம் வரும்படி நடந்து கொண்டது அறிந்து 9 மாத கைக்குழந்தையுடன் இருந்த் பிரதீபாவை தனியாக அழைத்து விசாரணை செய்தபோது, ஆசிரியர் பயிற்சி முடித்த என்னை ராஜம்பாள் மகன் ரமேஷ் க்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்கள். 9 மாத பெண் குழந்தை உள்ளது. ஆனாலும் வரதட்சனை கேட்டு மாமியார் ராஜம்பாள் அடிக்கடி சண்டை போடுவார். கணவருடனும் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
இதையெல்லாம் தாங்க முடியாமல் தான் சம்பவத்தன்று 100 நாள் வேலை முடிந்து களைப்பாக ஓட்டு வீட்டில் படுத்திருந்த ராஜம்பாள் உடலில் அரை லிட்டர் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டேன். அதனால் தீயில் கருகினார். கரும்புகை வருவதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தார்கள். அவர்களுடன் நானும் போய் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இன்று இறந்துவிட்டார் என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.
பிரதீபா சிறைக்கு போனால் அவரது 9 மாத கைக் குழந்தையின் நிலை தான் பரிதாபமாக இருக்கப் போகிறது. ஏதுமறியாத பிஞ்சு குழந்தையை நினைக்கும் போது மனம் வலிக்கிறது. கைக்குழந்தையைப் பற்றி ஒரு வினாடி நினைத்திருந்தால் பிரதீபா இந்த முடிவிற்கு போய் இருக்க வாய்ப்பில்லை.
இப்படி வரதட்சனை கொடுமையால் மாமியார், மருமகள்களை தீ வைக்கும் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.