சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமாியில் கரோனா ஊரடங்கிற்கு முன்தினம் கூட வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனர். அதன்பிறகு கரோனா தாக்கம் அதிகரித்ததால் கன்னியாகுமரி சுற்றுலாத்தலம் முடங்கியது. இதனால் அங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்துவந்த வியாபாரிகள் வறுமைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் முதலீடு செய்து பொருட்களை வாங்கி விற்பனைக்கு வைத்த வியாபாரிகள், நஷ்டத்தில் தள்ளப்பட்டதோடு, வட்டிக் கடன்களும் அவர்களைத் துரத்தியது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சுற்றுலாத் தலங்கள் செயல்படத் தொடங்கியதும் கன்னியாகுமாியிலும் சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்தொடங்கினார்கள். இதனால் வியாபாரிகளும் கடைகளைத் திறந்து விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் முன்பைப் போல் வியாபாரம் இல்லாமல் தவித்தனர். இதனால் கடைகளில் பொருட்களும் நிரம்பியே இருந்தன. இந்நிலையில், இன்று (9-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கடற்கரையையொட்டி காந்திமண்டபம் அருகில் இருந்த 74 நிரந்தரக் கடைகள் மற்றும் 3 தற்காலிகக் கடைகளில் திடீரென்று தீப்பிடித்தது.
ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென்று காட்டுத்தீ போல் வேகமாக மற்ற கடைகளிலும் பரவியது. கொஞ்ச நேரத்தில் அந்தப்பகுதி புகை மண்டலமாக மாறியது. கடைகளில் இருந்த துணிகள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், ஃபேன்சி பொருட்கள், பாசி மாலைகள், செருப்புகள் எரிந்து கரிக்கட்டைகளானது. இவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறுகின்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய 3 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி, தீயை அணைத்தனர். அதற்குள் 74 கடைகளும் எரிந்து தரைமட்டமானது.
கடைகள் இருந்த இடம் தேவசம்போர்டுக்கு சொந்தமான இடம் என்பதால் வருமானத்துக்கு வேண்டி அங்கு கடைகள் கட்ட அனுமதித்தனர். இதனால் காந்திமண்டபம் அருகில் இருந்து கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனால் அந்த பகுதியில் இவ்வளவு கடைகள் அனுமதிக்கக் கூடாது என்று ஒரு பிரிவினர் எதிர்ப்புக் காட்டி வந்தனர். மேலும் அந்த வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கும் பெரும் இடையூறாகவும் இருந்து வந்தது.
இதனால் திடீரென்று அந்த கடைகள் எப்படித் தீப்பிடித்து எரிந்தது. மின் கசிவால் தீப்பிடித்ததா? அல்லது திட்டமிட்ட சதியால் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு உடனே நோில் சென்ற கலெக்டர் அரவிந்த், எஸ்.பி பத்ரி நாராயண், ஆா்.டி.ஒ. மயில் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.