போலீசார் அடித்ததாலே விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தேசியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க, தனக்குச் சொந்தமான பைக்கை போலீசார் பறிமுதல் செய்து விட்டார்கள் என இளைஞர் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட மேலத்தெருவினை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான கணேசமூர்த்தி. இவர் கடந்த சனிக்கிழமையன்று மாலை வேளையில், மிகுந்த மது போதையில் தன்னுடைய இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்திருக்கின்றார்.
கீழே விழுந்ததால் முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு ரத்தச்சுவடுடன் சாலையிலேயே மீண்டும் மது அருந்தியிருக்கின்றார். இந்நிலையில் முகமெல்லாம் ரத்தத்துடன் சாலையில் ஒருவர் மது அருந்திக் கொண்டிருக்கின்றார் என்கின்ற தகவல் எட்டயபுரம் காவல் துறைக்கு சென்றடைய, போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, கணேசமூர்த்தியை கண்டித்து அவருடைய பைக்கை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
எனினும், காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய பைக்கை மீட்காத கணேச மூர்த்தி நேற்று (வெள்ளிக்கிழமை) இரவில் தனது வீட்டினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததாலே மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாக, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.