கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா. இவர், பலரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அவர் தலைமறைவான இடத்தை கண்டறிந்த அவரால் பாதிக்கப்பட்ட சிலர் அவரை தேடி பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அவர் மீது புகாரும் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறுகையில், மின் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி ஈடுபட்டுள்ளார். குறிப்பாக மின்துறை அமைச்சர் தனது உறவினர் என கூறி வேலை வாங்கி தருவதாக திருச்சி, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டோரிடம், 50 லட்சத்திற்கும் மேல் பணம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்தனர். மேலும், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கரூர் குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.