கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் சேலம் மண்டலம் அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து நேற்று காலை விமானம் மூலம் சேலம் சென்றார். அப்போது திடீரென ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சேலம் மண்டல அளவிலான கள ஆய்வில் தொழில் முனைவோர், விவசாயிகள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலம் மண்டல அளவிலான கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இது வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் இன்று மாலை மீண்டும் சேலத்திலிருந்து சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.