அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்திருந்தது. அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து குறையாமல் இருப்பதால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரத்த அழுத்தம் மற்றும் குடல் புண்ணிற்கான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. தூக்கமின்மை காரணத்தால் முறையாக உணவுகள் எடுத்துக் கொள்ளாததால் செந்தில் பாலாஜிக்கு இந்த பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையும் நடந்தது.
இந்நிலையில், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியினுடைய ரத்தப் பரிசோதனை அறிக்கை, எக்கோ பரிசோதனை அறிக்கை, எச்.ஆர்.சி.டி ஆகிய சோதனை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை அறிக்கையில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.