கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி இந்திரா (வயது 55). ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள நாச்சியார் பேட்டை ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 5 மணியளவில் தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்று பயிற்சி முடித்து ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் பின்புறம் உள்ள குளத்தின் படிக்கட்டில் இறங்கி தனது கால்களைக் கழுவிக் கழுவிக் கொண்டிருந்தபோது வழுக்கி குளத்துக்குள் விழுந்துள்ளார் இந்திரா.
அவருக்கு நீச்சல் தெரியாததால் தப்பிக்க வழி தெரியாமல் தத்தளித்து குளத்து நீரில் மூழ்கி இறந்துள்ளார். இவரது சடலம் குளத்தில் மிதந்ததை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சடலத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பு மீனா, ஸ்ரீமுஷ்ணம் காவல் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன ஆசிரியை இந்திராவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். குளிக்கச் சென்ற ஆசிரியை குளத்தில் தவறி விழுந்து இறந்த சம்பவம் ஸ்ரீமுஷ்ணம் குதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.